பூமி உட்பட கோள்களை கரன்சி மதிப்பில் கணக்கிடும் முறையை விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாக்லின் கண்டுபிடித்துள்ளார். அவரது கணக்கின்படி, நாம் வாழும் பூமியின் பண மதிப்பு
ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் லட்சம் கோடி. கொஞ்சம் தலை சுற்றவே செய்யும். அதாவது 3,000 ட்ரில்லியன் பவுண்டு. (
1 ட்ரில்லியன் =1 லட்சம் கோடி) கோள்களின் அளவு, வயது, வெப்பம், உயிரினங்கள், அடர்த்தி மற்றும் வளங்கள் ஆகியவை அடிப்படையில் மதிப்பை கிரேக் கணக்கிடுகிறார். அதன்படி, பிரபஞ்சத்தில் உள்ள கோள்களிலேயே பூமிதான் விலை மதிப்பில் முதலிடம் வகிக்கிறது. செவ்வாய் கிரகத்தின் மதிப்பு ரூ. 7.2 லட்சம் மட்டுமே.
உலோகத்தில் வெள்ளியே பரவாயில்லை போலிருக்கிறது. ஒரு கிராம் ரூ. 55 வரை விற்கிறது. வெள்ளி கிரகம் ஒரு ரூபாயை விட குறைந்த மதிப்புடன் கடைசி இடத்தில் இருக்கிறது. தவிர, 1,235 கிரகங்கள் உயிரினங்கள் கால் வைக்க முடியாத நிலையில் எல்லா வகையிலும் எதிர்மறை மதிப்பெண்கள் பெறுவதால், அவற்றுக்கு பண மதிப்பே இல்லை என்கிறார் கிரேக்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் கெப்ளர் விண்கலத்தின் மதிப்பு ரூ. 4,320 கோடி என்ற அடிப்படையில், கிரகங்களின் மதிப்பை கிரேக் கணக்கிட்டுள்ளார்.
கிரகங்களை கண்டுபிடிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்ட கெப்ளர் விண்கலத்தின் மதிப்பை வைத்து, பல்வேறு கிரகங்களின் முக்கிய அம்சங்கள் அடிப்படையில் மதிப்பை அவர் நிர்ணயித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்த பார்முலாவின்படி விலை மதிக்க முடியாதது எதுவுமில்லை. ஆனால், பூமியைப் போல அதிக மதிப்புள்ள கிரகங்களும் இல்லை என்பதை உணர முடிகிறது’’ என்றார்.